ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு வலங்கைமான் ஸ்ரீவைத்தீஸ்வரர் ஆலயத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வைத்தீஸ்வரர், அருணாசலேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், காசி விசுவநாதர், கைலாசநாதர் என ஐம்பெரும் சிவாலயங்கள் உள்ளன.
இந்நிலையில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு வலங்கைமான் ஸ்ரீதையல்நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளி அருள் பாலித்து கொண்டு இருக்கும் துர்க்கை அம்மனுக்கு சப்த சதி பாராயண சண்டி ஹோமம், சுவாமி அம்பாள் அபிஷேகம், சண்டி ஹோமம், பூர்ணா ஹீதி, கடம் புறப்பாடு, துர்க்கை அம்மன், மகாலட்சுமி அம்பாளுக்கு மகாபிஷேகம், கலசாபிஷேகம், தீபாராதனை நடைபெற்று அனைவருக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாலை 6 மணி அளவில் ஆலய வளாகத்தில் நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜை நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டு தீபமேற்றி வழிபாடு செய்தனர். இதேபோல வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் உள்ள சக்தி தலம் என பக்தர்களால் அழைக்கப்படும், மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அதிகாலை முதலே திரளான பெண்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.