தொலை தூரத்தில் வசிக்கும் கிராமப்புற மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழக அரசு கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இம் முகாமில் தாய்- சேய் நலம், குழந்தைகள் நலம், தொற்றா நோய்கள், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய், காது, மூக்கு, தொண்டை, கண் மருத்துவம், வயது முதிர்ச்சியினால் ஏற்படும் நோய்கள், தோல் மருத்துவம் மற்றும் காசநோய் உட்பட அனைத்து நோய்களுக்கும் சிறப்பு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கும், தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கும் பரிந்துரை செய்யப்பட்டு மேல் சிகிச்சை எடுக்க வேண்டி இருந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு, உயர் மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் வகையில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை சந்திரசேகரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். மருத்துவ முகாமில் ஆலங்குடி வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமையில் சிறப்பு நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் பெண்களுக்கான மருத்துவம் மற்றும் குழந்தைகள் மருத்துவம் மற்றும் கண் மருத்துவம், சித்த மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் ஆய்வக பரிசோதனைகள், இயன் முறை மருத்துவம், இசிஜி, காச நோய் தொடர்பான சிகிச்சைகள் மற்றும் கர்ப்பப்பை, வாய் புற்றுநோய் மற்றும் சிறப்பு நோய்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முகாமில் வலங்கைமான் வட்டார அளவில் உள்ள அனைத்து மருத்துவ அலுவலர்களும், செவிலியர்களும், சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், ஆய்வக நுட்புணர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.