ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் குருநாதசுவாமி கோவில் தேர் திருவிழா அடுத்த மாதம் 7 தேதி துவங்கி நாட்கள் வெகு விமரிசையாக நடக்கும்.
முன்னதாக கடந்த புதன்கிழமை கோவில்பண்டிகை பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
தென்னிந்திய புகழ் பெற்ற குதிரை சந்தை, மாட்டுச் சந்தை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் திருவிழா நடைபெறும் நிலையில், இன்று சாலையோர கடைகளுக்கான ஏலம், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இதில், 38 பேர் பணம் கட்டி ஏலத்தில் கலந்து கொண்டனர்.
ஏலம் துவங்கிய போது, உள்ளூர் நபர்களே ஏலத்தில் அதிக தொகை கூறி, டெண்டர் எடுத்துக் கொள்வதாகவும், இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்றும் மற்றொரு தரப்பினர் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக டெண்டர் சம்பந்தமான வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும், ஒரு தரப்பினர், தனி நபருக்கு, சாலையோர கடைகளுக்கான ஏலம் நடத்தாமல், ஊராட்சி ஒன்றிய நிர்வாகமே கடைகளுக்கு ஏலம் விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இருதரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சனையை கருத்தில் கொண்டு, வரும் புதன்கிழமை டெண்டர் ஒத்தி வைப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் அறிவித்தார்.
இதனால் டெண்டரில் கலந்து கொண்டவர்கள் கலைந்து சென்றனர்.