பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பரப்ரஹ்மம் ஃபவுண்டேஷன் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மாணவ, மாணவியர்களிடையே மரக்கன்றுகள் வளர்ப்பு திட்டம் சிறப்பாக தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், பரப்ரஹ்மம் ஃபவுண்டேஷன் நிறுவனரும், அன்னை தெரசா கல்வி நிறுவனங்களின் தலைவருமான பரப்ரஹ்மம் த.ப. முத்துக்குமரன் அவர்கள் கலந்து கொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு மொத்தம் 750 மரக்கன்றுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “மரங்களை நடுவது மட்டுமல்ல, அவற்றை முறையாக பராமரித்து வளர்ப்பதே முக்கியம். மாணவர்கள் சிறு வயதிலிருந்தே இயற்கையை நேசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும், மாணவர்கள் வளர்க்கும் கொய்யா மற்றும் நெல்லி மரக்கன்றுகள் காய் காய்க்கும் போது, ஒவ்வொரு மரத்திற்கும் ரூ.500/- வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும், பலா மரக்கன்றுகள் காய் காய்க்கும் போது, ஒவ்வொரு மரத்திற்கும் ரூ.1000/- வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
மாணவர்கள் மரக்கன்றுகளை முறையாக பராமரித்து வளர்த்து, காய் காய்க்கும் நிலைக்கு கொண்டு வந்தால், 750 மாணவ, மாணவியர்களுக்கும் மொத்தமாக கூடுதல் ரூ.5 லட்சம் ஊக்கப் பரிசுத் தொகை வழங்கப்படும் என பரப்ரஹ்மம் த.ப. முத்துக்குமரன் அவர்கள் உறுதிபட தெரிவித்தார்.
இந்த மரக்கன்றுகள் வளர்ப்பு திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மட்டுமின்றி, மாணவர்களிடையே பொறுப்புணர்வு, இயற்கை மீது அக்கறை மற்றும் சமூக விழிப்புணர்வை உருவாக்கும் சிறப்பான முயற்சியாக அனைவராலும் பாராட்டப்பட்டது.