ஆடிப்பூரத்தையட்டி கும்பகோணத்தில் உள்ள ஐந்து சிவாலயங்களில் அருள்பாலித்து வரும் ஆடிப்பூர அம்மன்கள் மகாமக குளத்தில் ஒரே இடத்தில் எழுந்தருளினார்கள். அப்போது அஸ்திரத் தேர்வர்கள் தீர்த்தவாரி கண்டதோடு, பெண் பக்தர்கள் கொண்டு வந்த வளையல்கள் அம்மனுக்கு அணிவிக்கபட்டது.
மேலும், முளைப்பயிறு, பழங்கள் உள்ளிட்ட பொருள்களை வைத்து பெண்கள் சுமங்கலி பூஜை செய்தனர். இதைத் தொடர்ந்து ஆடிப்பூர அம்மன்களுக்கு வளையல் அலங்காரமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் திரண்டு பூவோடும் பொட்டோடும் எப்போதும் சுங்கலியாக இருக்க வேண்டும் என வேண்டிக்
கொண்டனர்.
ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில் சிவாலயங்களில் உள்ள அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த அம்மன்களை ஆடிப்பூர அம்மன் என அழைக்கப்படுவதோடு இந்த அம்மன்களுக்கு ஆடிப்பூரத் தினத்தன்று பெண்கள் சுமங்கலி பூஜை நடத்துவார்கள்.
அதன்படி ஆடிப்பூரத் தினமான இன்று கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர், நாகேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர் ஆகிய கோயில்களிலிருந்து ஆடிப்பூர அம்மன்கள் சிறப்பு அலங்காரம் செய்யபட்டு கும்பகோணம் மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் எழுந்தருளினார்கள்.
காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு வந்த ஆடிப்பூர அம்மன்களுக்கு, ஏராளமான பெண் பக்தர்கள் கொண்டு வந்த வளையல்கள் அணிவிக்கபட்டன. மேலும் முளைப்பயறு, பழங்கள் உள்ளிட்ட பொருள்களை வைத்து சுமங்கலி பூஜை செய்தனர். இதைத் தொடர்ந்து ஆடிப்பூர அம்மன்களுக்கு வளையல் அலங்காரமும் செய்யப்பட்டது.
அதன் பின்னர் அங்கிருந்து காசிவிஸ்வநாதர் கோயில் அம்மன் உட்பட ஐந்து ஆடிப்பூர அம்மன்களும் மகாமகக் குளத்தின் மேற்குக் கரையில் ஒரே இடத்தில் எழுந்தருளினர். அப்போது ஐந்து கோயில்களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட அஸ்திரத்தேவருக்கு பால், சந்தனம், மஞ்ள், திரவியம் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நான்கு அஸ்திரத் தேவர்களும் ஒன்றன் பின் ஒன்றாகக் குளத்தில் தீர்த்தவாரி கண்டனர். அப்போது அங்கிருந்த பக்தர்களும் குளத்தில் இருந்த தண்ணீரில் மூழ்கியும், சிலர் தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்டும் வேண்டிக் கொண்டனர். பின்னர், குளத்தின் கரையில் எழுந்தருளிய ஆடிப்பூர அம்மன்களுக்கு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்தந்தக் கோயில்களுக்கு ஆடிப்பூர அம்மன்கள் சென்றனர்.