தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் இன்று (07.08.2024) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், கல்வி கற்பதற்கு வறுமை என்பது உங்களுக்கு ஒரு தடையாக இருக்க கூடாது. மாணவிகளான நீங்கள் எப்பொழுதும் நம்மால் முடியாதது எதுவுமில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். தோல்வி ஏற்படும்போது துவண்டுவிடாமல் அதிலிருந்து அனுபவத்தை கற்றுக் கொள்ள வேண்டும். தோல்வியே உங்களை பக்குவப்படுத்தி சிறந்த வெற்றியாளராக மாற்றும்.

மேலும் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கூறியதுபோல் ‘கனவு காணுங்கள்” என்பதற்கிணங்க நாம் என்னவாக இருக்க ஆசைப்படுகிறோமோ அப்படியே ஆகிறோம் என்பதை மனதில் வைத்து எப்பொழுதும் நேர்மறை எண்ணங்களை உருவாக்கி கொண்டு அதற்காக உழைக்க வேண்டும்.

செல்போன் பயன்படுத்தும் போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உங்களது புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை தேவையில்லாமல் சமூக வலை தளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும். அப்படி உங்களது புகைப்படம் மற்றும் வீடியோவை வைத்து யாராவது மிரட்டினால் தயங்காமல் காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கலாம். இதனால் மிரட்டிய நபருக்கு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் படி 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றுத் தர முடியும். மேலும் புகார் அளிப்பவர்களின் விவரமும் ரகசியமாக வைக்கப்படும்.

எப்போதும் உங்களுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர் கூறுவதின் படி நடக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கல்வி கற்பதை நிறுத்த கூடாது. தேவையில்லாத பொறாமை, கோபம் போன்றவற்றை தூக்கி எறியுங்கள். எப்பொழுதும் தன்னம்பிக்கை மற்றும் பிறருக்கு உதவும் எண்ணத்துடன் இருந்து வாழ்க்கையில் மிகபெரிய வெற்றியாளராக மாற வேண்டும் என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

அதன் பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பள்ளி தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயலர் திரு. முரளி கணேசன், இயக்குனர் திரு. லட்சுமி ப்ரீத்தி, தலைமை ஆசிரியர் திருமதி. சாந்தினி கௌசல் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *