ராஜபாளையம் அருகே சீல் வைக்கப்பட்ட கோவில் கதவு திறப்பு! மர்ம ஆசாமி கைவரிசை!
ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் கிராமம் உள்ளது. ஒரே சமூகத்தைச் சேர்ந்த சுமார் 1500 குடும்பங்கள் இருக்கின்றன.
இதில் மேற்குத் தெரு, கிழக்குத் தெரு என இருக்கின்றனர். கிராமத்தின் மையப்பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் விநாயகர் சதூர்த்தி மற்றும் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதில் ஒரு தரப்பினர் விநாயகர் சதூர்த்தி கொண்டாடினால் மற்றொறு தரப்பினர் புரட்டாசி பொங்கல் திருவிழா கொண்டாடுவர். இப்படி நெடுங்காலமாக கொண்டாடிவந்தவர்களிடம் கோவில் உரிமை குறித்த பிரச்சனை எழுந்தது. இதில் இருதரப்பினராகப் பிரிந்து ஒருவருக்கொருவர் மோதிகொள்ளும் சூழல் ஏற்பட்டது.
இதனால் வட்டாட்சியர் தலைமையில் காவல் துறையினர் கோவிலை பூட்டி சீல் வைத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த கோவிலை மர்ம நபர் ஒருவர் நேற்று கோவில் கதவை திறந்துவிட்டு சென்றுவிட்டார். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சுந்தரேசன் சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வருவாய் துறைக்கு கொடுத்த தகவலின்பேரில் வருவாய் துறையினர் வந்து மீண்டும் கோவிலை பூட்டி சீல் வைத்தனர் இதுகுறித்து போலிசார் கோவிலை திறந்து வைத்த மர்ம நபரை தேடி வருகின்றனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது