மதுரை, அவனியாபுரத்தில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் நடத்திய திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்படைந்தது.
மதுரை மாநகராட்சி 91வது வார்டு பகுதிக்குட் பட்ட அவனியாபுரம் இளங்கோவன் தெரு மற்றும் மணிகண்டன் தெரு பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கழிவுநீர் முறையாக செல்லாமல் வெளியேறி சாலையில் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதேபோல் இந்த தெருக்களில் வாகனங்களும் செல்ல முடியால் இருக்கிறது. இந்த பிரச்சனை குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை விரைந்து அகற்றுவதுடன், கழிவு நீர் கால்வாய்களை சீரமைக்க வலியுறுத்தி அவனியாபுரம் புறவழிச்சாலையில் நேற்று பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப் போது இப்பிரச்னையில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை யைடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது.