எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே ஸ்ரீ வெற்றி முனீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் திரெளான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சீர்காழி நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் நடராஜர் பிள்ளை சாவடியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெற்றி முனீஸ்வரர் சுவாமி திருக்கோயில்.
இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 19-ஆம் தேதி யாகசாலைகள் பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்றது, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்றது.
சிவாச்சாரியார் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து மேளதாள மங்கல வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து கோபுரங்களை அடைந்தனர்.
அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத கோயில் கலசத்தில் புனிதநீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகம், உற்சவமூர்த்தி கும்பாபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. பின்னர் மூலவர் சன்னதியில் முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை காண சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பணியின் போது அகற்றப்பட்ட முனீஸ்வரர் கோயில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.