திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே செம்மங்குடி ஊராட்சியில் சோழ சூடாமணி ஆறு மற்றும் சேங்காலிபுரம் வடி வாய்க்கால் செல்கிறது.
அங்கு தடுப்பு சுவர் கட்டுவதாக கூறி அதிக அளவில் ஆற்று மண்ணை எடுத்து இரு கரை ஓரங்களிலும் போட்டுள்ளனர்.
அந்த மண்ணை தற்போது திருவாரூர் பகுதிகளில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பல இடங்களுக்கு பயன்படுத்தபோவதாக கூறி, மாவட்ட நிர்வாகம் உத்தரவு போட்டுள்ளதாக இன்று மாலை ஒரு ஹிட்டாச்சி இயந்திரத்தை கொண்டு வந்து அந்த மண்ணை எடுப்பதற்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில்.. அதனை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட செம்மங்குடி கிராம மக்கள் சாலை மறியல் செய்வதாக இருந்தனர்.
இதை அறிந்த வட்டாட்சியர் செந்தில் குமார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சு வார்த்தையில் இந்த மண்ணை கிராமத்தில் எந்தெந்த இடங்களுக்கு தேவை என்பதை எழுதி மனுவாக கொடுங்கள்… என்றும், அதன்படி நாங்கள் அந்த மண்ணை அங்கு வைக்கின்றோம்.. என உறுதி கூறினர்.
பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ‘இந்த மண்ணை எக்காரணத்தை கொண்டும் வெளியே அனுப்ப மாட்டோம்… எங்கள் கிராமத்திற்கு பயன்படுத்த வேண்டும்.. அதனை நாங்கள் வெளியில் கொடுப்பதற்கு தயாராக இல்லை…’ என ஹிட்டாச்சி இயந்திரத்தின் அருகில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்சமயம் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர்..
இந்த மண்ணை வெளியில் எடுக்க முற்பட்டால் நாங்கள் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.. என ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் தெரிவித்தார்.