எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வீட்டில் சுகப்பிரசவம் மூலம் குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோர்கள் கலந்துகொண்ட குடும்ப விழா இன்று சீர்காழி புறவழிச்சாலையில் உள்ள லான் பார்க்கில் நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இயற்கை வாழ்வியலை பின்பற்றும் 400 பேரும் மற்றும் அதில் ஈடுபாடு கொண்ட 1500 பேர் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர். பெண்கள் வீட்டில் குழந்தை பெற்றுகொள்வது எங்களின் பிறப்புரிமை என்றும், இதில் சுக பிரசவத்தில் வீட்டில் குழந்தை பெற்ற குடும்பத்தினர்கள் மரபுப்பேறு அனுபவங்களையும் பகிர்ந்தனர்.

அதில் அவர்களின் அனுபவ பகிர்வில் மரூட்டி முறையில் குழந்தை பெற்றுக்கொண்டதையும் பகிர்ந்தனர்‌.
நிகழ்வில் சமீபத்தில் சேலம் மாவட்டத்தில் இரட்டை குழந்தை பெற்ற மெஹராஜ்தீன், ஹாஜான் பேகம் தம்பதியினருக்கு தாய்க்கு நல்வழி நாயகி விருதும், 1 கிராம் தங்க காசும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் 5 குழந்தைகளை பெற்ற மரபின் மாண்புகள் விருதும், அந்த தம்பதியினருக்கு 2 கிராம் தங்க காசும், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சுகாதார துறையினரின் சட்டத்திற்கு புறம்பான செயல்களை சிறப்பாக கையாண்ட சீர்காழி பெல்சியா ஜானுக்கு சிங்கப்பெண் விருதும், அவரது குடும்பத்துக்கு 1 கிராம் தங்க காசும் பரிசாக வழங்கப்பட்டது.


தொடர்ந்து அவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்த தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து உட்பட, எந்த ஊசிகளும் போடாமல் சீராக ஆரோக்கியத்துடன் வளர்ந்து வருவதாகவும், பனிக்குடம் உடைந்து 13 நாட்கள் கழித்தும் ஆரோக்கியமாக குழந்தை பெற்ற அனுபவத்தையும், சில பெண்கள் முதல் 2 குழந்தை அறுவை சிகிச்சையிலும் அடுத்து வீட்டில் 3 வது குழந்தை பெற்றெடுத்த அனுபவத்தையும், 11 மாதம் கழித்து குழந்தை பிறந்த அனுபவங்களையும் ஒவ்வொரு குடும்பத்தினரும் சுய அனுபவமாக பகிர்ந்தனர்.


இங்குள்ள பசுமை அரங்கத்தில் 400 குழந்தைகளுக்கு கதை சொல்லல், கைவினைப்பொருட்கள் செய்முறையும், அதை அவர்களையே செய்து மகிழ்விக்கும் விதமாகவும் விளையாட்டுகள் இடம்பெற்றன வருகை தந்த அனைவருக்கும் அடுப்பில்லா சமையலில் இடம்பெற்ற சுவையான சிற்றுண்டிகளும், மதிய உணவு மரபு இரக அரிசியில் செய்யப்பட்ட சுவையான உணவுகளும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *