அரியலூர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே மாவட்ட சாலையோர வியாபாரிகள் சஙகத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு பிஎம் ஸ்வா நிதி திட்டத்தில் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கி வந்த கடன் தொகையினை தொடர்ந்து வழங்கிட வேண்டும். அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் இலவச தள்ளுவண்டி வழங்கிட வேண்டும். வெண்டர் கமிட்டி கூட்டத்தை மாதம் ஒரு முறை நடத்த வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு இலவச வீட்டு மனை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு, வெண்டர் கமிட்டியின் கிளைத் தலைவர் கே.சோபியா தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பி.ரெங்கராஜ் கலந்து கொண்டு கோரிக்கை விளக்கவுரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலர் பி.துரைசாமி, மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சிற்றம்பலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.