வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாணிக்கமங்கலம் உள்ளிட்ட மூன்று கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடைபெறும் திட்டப் பணிகளை திருவாரூர் மாவட்ட திட்ட இயக்குனர் செந்தில் வடிவு நேரில் ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் ஆதிச்ச மங்கலம், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி உள்ளிட்ட 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவ்வூராட்சிகளில் மத்திய, மாநில அரசு நிதியின் மூலம் அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் கனவு இல்லம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் வலங்கைமான் அருகே உள்ளமாணிக்கமங்கலம், பாப்பாக்குடி, மாளிகை திடல் ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் திட்ட பணிகளை திருவாரூர் மாவட்ட திட்ட இயக்குனர் செந்தில் வடிவு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் கலைஞர் கனவு இல்லம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்,ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டம் ஆகிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருவதை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாகவே வீடு கட்டும் பணியினை விரைவில் முடிக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தனி நபர்களுக்கான பண்ணை குட்டை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூட்டத்தில் திட்டப் பணிகளை விரைந்து முடித்திட அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் முரளி, செந்தில்,உதவி செயற் பொறியாளர் ரங்கராஜன்,ஒன்றிய பொறியாளர்கள் சண்முகசுந்தரம், சுகந்தி,ஒன்றிய மேற்பார்வையாளர்கள் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.