மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த 5-ந் தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடலும், 6-ந் தேதி நாரைக்கு முக்தி அருளிய திருவிளை யாடலும், 7-ந் தேதி மாணிக்கம் விற்ற திருவிளையாடலும், 8-ந் தேதி தருமிக்கு பொற்கிழி அருளிய திருவிளையாடலும், 9-ந் தேதி உலவாக்கோட்டை அருளிய திருவிளை யாடலும், 10-ந் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடலும் நடைபெற்றது.
11-ந் தேதி வளையல் விற்ற திருவிளை யாடலும் அன்று மாலை சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடை பெற்றது. நேற்று நரியை பரியாக்கிய திருவிளையாடல் நடைபெற்றது.
திருவிழாவில் முத்தாய்ப்பாக சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலை நடைபெற்றது. இதற்காக கோவிலில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி புட்டுத்தோப்பு வந்தடைந்தனர்.
இறைவனை மனிதனாக அவதரித்து அடியார்களுக்கு உதவி பிரம்படி பட்ட திருவிளையாடலை நினைவு கூறும் வகையில் பிட்டுத் திருவிழா நடைபெற்றது. சுவாமி தங்க கூடையில் பிட்டுக்கு மண் சுமந்த கோலத்தில் பிரியா விடையுடன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் வேறெங்கும் இல்லாத வகையில் பக்தர்களுக்கு பிட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.