திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல்படி காரைக்கால் காவேரி அசட் ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும் “ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி” பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் முன்னோடியாக தண்டலை ஊராட்சியை “ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி இல்லா ஊராட்சி மண்டலமாக” மாற்றும் வண்ணம் நெகிழி சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை 18.09.2024 அன்று காலை மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ கொடியசைத்து துவக்கிவைத்தார்.

நிகழ்ச்சிக்கு ஓ.என்.ஜி.சி மனிதவளத்துறை முதன்மை பொதுமேலாளர் கணேசன் தலைமை தாங்கினார். தண்டலை ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஏரியா பொதுமேலாளர் சரவணன் , பொதுமேலாளர் பிரசாந்ஜித் கோகோய், பொது மேலாளர் பாண்டியன் ஆகியோர்
கலந்து கொண்டனர்.

ஆறு மாத கால தொடர் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இத் திட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகள், வர்த்தக சங்கங்கள், சமூக அமைப்புகள், சேவை நிறுவனங்கள், தெரு நல சங்கங்கள் தன்னார்வலர்கள் உட்பட பல்வேறு அமைப்புகளின் ஆதரவுடன் விழிப்புணர்வு பிரச்சாரம், தெரு நாடகங்கள், போட்டிகள், பெண்கள், மாணவர்கள் நெகிழியின் பாதிப்புகளை அறிந்திடும் வண்ணம் ஓவிய போட்டிகள், கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவை நடத்திப் பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.

பெற்றோர்களுக்கு நெகிழி பயன்படுத்துவதன் பாதிப்புகளை எடுத்துரைத்து சிறப்பாக செயல்படும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு சான்றிதழ் வழங்கப்படும்.

மீண்டும் மஞ்சப்பை என்ற பிரச்சாரத்தின் மூலம் எளிதில் மக்கும் பருத்தி பைகளை பயன்படுத்த ஊக்குவிக்கப்படும், வீடுதோறும் நெகிழி பயன்படுத்தா வீடு என ஸ்டிக்கர் ஒட்டி சமுதாயத்தில் மதிப்பை மதிப்பு ஏற்படுத்தப்படும்.

பெண்களிடம் கையேடுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.சுகாதார துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் மகளிர் குழுக்கள், பள்ளி கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்படும், மேலும் தினந் தோறும் வீடுகளிலும், அலுவலகங்கள். கடைகளிலும் நெகிழி சேகரிப்பு பணிகள், செயல்படுத்தப்பட உள்ளது.

இப்பணி ஆறு மாத காலத்திற்கு பாலம் தொண்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.

இன்றைய நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும் மஞ்சள் பை வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின் வெற்றிக்கு பத்திரிக்கை, ஊடகத்துறை நண்பர்களின் தொடர் கண்காணிப்பும் ஊக்குவிப்பும் அவசியம்; எனவே அவர்களின் ஒத்துழைப்பினை ஓஎன்ஜிசி நிறுவனம் வேண்டிக் கொண்டது.

தொடர்ந்து இந்தத் திட்டம் மற்ற ஊராட்சிகளிலும் அடுத்த மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்றும் ஓஎன்ஜிசி நிறுவனம் தெரிவித்தது.நிகழ்ச்சியில் சமூக பொறுப்புணர்வு திட்ட முதன்மை மேலாளர் விஜய் கண்ணன், துணைத்தலைவர் மகாலெட்சுமி செல்வம். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் நடனம், ஊராட்சி செயலர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சமூக பொறுப்புணர்வு திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், பாலம் தொண்டுநிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *