அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்து நான் பேச தயார் எனவும், திமுகவில் ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்து பேச தயாரா? என அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சவால் விடுத்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் முப்புடாதி அம்மன் கோவில் மைதானத்தில் வைத்து அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் நவரத்தினம் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர் மன்றம் சார்பில் பாபுராஜ், முன்னாள் எம்எல்ஏ ராஜசேகர், அம்மா பேரவை சார்பில் கிருஷ்ணராஜ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். பொதுக்கூட்டத்தில் கே டி ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:
“அதிமுகவில் உள்ளவர்கள் கட்சியில் இருந்து விலகி அடுத்த கட்சியை சேர மாட்டார்கள். மற்ற கட்சியில் இருந்து ஏராளமானோர் விலகி அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி எடப்பாடி கட்சியை கொண்டு செல்கிறார். கொடுக்கும் ஆட்சி அதிமுக. அதை தட்டிப்பறிக்கும் கட்சி திமுக. ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் நான் போட்டியிட்ட போது ஏராளமானோர் எங்களுக்கு வாக்களித்தீர்கள்.
அவர்களுக்காக நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டணி அமைத்த விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டதால் நான் வெற்றி வாய்ப்பை இழக்க வேண்டியதாகி விட்டது. இப்பகுதி சுற்றுவட்டாரங்களில் ஏராளமான வாக்குகள் நான் பெற்றிருந்தேன். எழுச்சியான தொண்டர்கள், மக்கள் உள்ள பகுதி இது. 2016ல் அதிமுக ஆட்சி அமைத்தே தீரும். எடப்பாடி முதலமைச்சர் ஆகியே தீருவார். உங்களுக்கு எல்லாவகைகளிலும் உதவி செய்தே தீர்வோம். உண்மை உறங்கும் போது பொய் ஊர்வலம் வரும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது.
திமுகவில் மக்களைப் பற்றி கவலைப்பட்டது இல்லை. ஸ்டாலினுக்கு எண்ணம் எல்லாம் உதயநிதியை உதவி முதல்வர் ஆக்குவது குறித்து தான். திமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்பட்டது இல்லை. தோற்றாலும் ராஜபாளையம் தொகுதி மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன். ராஜபாளையத்திற் கென்று தனி ஈர்ப்பு, பாச உணர்வு எனக்கு உள்ளது. தமிழகத்திற்கு அம்மா கொண்டுவந்த 8 கூட்டு குடிநீர் திட்டங்களில் மூன்று கூட்டு குடிநீர் திட்டங்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு நான் வாங்கித் தந்தேன். தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் நாங்கள் கொண்டு வந்தோம்.
மருத்துவமனையிலும் ஏராளமான கட்டிடங்கள், வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வந்துள்ளேன். மாவட்டத்தில் நான்கு அரசு கலைக்கல்லூரிகள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ராஜபாளையத்தில் அதிமுக வெற்றி பெற்றவுடன் கலை கல்லூரி அமைக்கப்படுவது உறுதி. ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஸ்டாக் எதுவும் இல்லை என்கிறார்கள். கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருவது அனைவருக்கும் தெரியும். மக்களுக்கு நன்மை திமுக ஆட்சியில் எதுவுமே கிடையாது. திமுக ஆட்சியின் தவறுகளை தட்டி கேட்டு வருகிறோம்.
அதிமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு பேச நான் தயார். திமுக ஆட்சியில் நீங்கள் செய்த சாதனைகள் குறித்து பட்டியலிட்டு பேச தயாரா? மக்கள் விரும்பும் கட்சியாக உள்ள எங்களுக்கு ஆதரவு தாருங்கள். தன்னிறைவுத் திட்டம், குடிநீர் திட்டம், போன்றவைகளை படிப்படியாக நாங்கள் கொண்டு வந்தோம். ஏழைகளை வாழ வைக்க வந்த கட்சி அதிமுக. அதிமுக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் ரூபாய் 2500 வழங்குவோம். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து விட்டது. இதற்கு ஒரு முடிவு கட்டுவதற்கு அதிமுகவுக்கு ஆதரவு தாருங்கள்- வருகின்ற அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேசினார். கூட்டத்தில் ராஜபாளையம் நகர செயலாளர்கள் முருகேசன், பரமசிவம், ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.குருசாமி, ராஜ்குமார், தொழிற்சங்கம் சார்பில் குருசாமி, மகளிர் அணி அழகு ராணி, செட்டியார்பட்டி அங்கு ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.