அரியலூர், அக். 4: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் நகராட்சி அலுவலகம் முன் ஏஐடியுசி-யினர் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு 14 ஆண்டுகள் வழங்கப்படாமல் உள்ள சேமநல நிதி மற்றும் வட்டியுடன் கூடிய இருப்புக் கணக்கு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும். ஆண்டு தோறும் இருப்பு கணக்கை வழங்கிட வேண்டும். குறைந்த பட்ச ஊதிய சட்டப் படி தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையின் படி துப்புரவு பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.10,000 மற்றும் அகவிலைப்படி ரூ.6,593 என மாதம் ரூ.16,593 வழங்கிட வேண்டும்.மேஸ்திரிக்கு சம்பளம் ரூ.13,000, அகவிலைப்படி ரூ.6,593 என மாதம் ரூ.19,593 வழங்கிட வேண்டும். மாவட்ட ஆட்சியர் அறிவித்த 31 மாத தினக்கூலி, அரியர்ஸ் பணத்தை உடனடியாக வழங்கிட வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவ அட்டை வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை}பிடித்தமின்றி 30 நாள் கணக்கிட்டு சம்பளம் வழங்கிட வேண்டும். பழுதில்லா தள்ளுவண்டி, மண்வெட்டி, கூடை உள்ளிட்ட பணி கருவிகள், 2 செட் சீருடை, தரமான கையுறை, சோப்பு உள்ளிட்டவைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் செயலர் ரெ.நல்லுசாமி தலைமை வகித்தார். தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், உள்ளாட்சி ஏஐடியுசி சம்மேளன மாநிலச் செயலர் டி.தண்டபாணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர். மாவட்ட துணைத் தலைவர் தனசிங், கட்டடத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் பாண்டியன், நகர நிர்வாகி கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.