பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி, காஞ்சிபுரத்தில் ஆணிப்படுக்கை மற்றும் 100கிலோ எடை கொண்ட ராட்சச ஐஸ் கட்டி மீது 30க்கும் மேற்பட்ட வகையான யோகாசனம் செய்து பெண் ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் கல்பனா(36). இவர் யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார். இவர் தமிழகத்தில் நிலவி வரும் பெண் குழந்தைகளுக்கான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், இயற்கையில் கிடைக்க கூடிய காய்கறிகளின் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களுக்கு யோகாசனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதல்வர் தேவராஜ் ஏற்பாட்டில் லயன்ஸ் கிளப் மற்றும் தனியார் யோகா மெடிரேஷன் சார்பில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தி உடல் பலம் அறிந்து கொள்ள 2,555 ஆணிகள் பொருத்தப்பட்ட படுக்கையின் மீது பத்மாசனம், தனுர் ஆசனம், பவளமுத்து ஆசனம், சாந்தி ஆசனம் உள்ளிட்ட 51 வகையான யோகாசனங்களை 20 நிமிடங்களில் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் 100 கிலோ எடை கொண்ட 4 ராட்சச ஐஸ் கட்டியை மெத்தை போல் படுக்க வைத்து அந்தன் மேல் ஐஸ் கட்டியை வைத்து யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுகுறித்து, யோகா பயிற்சியாளர் கல்பனா கூறியதாவது:தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வலியுறுத்தி ஆணிப்படுக்கையின் மீது அமர்ந்தும், படுத்தும் 30 யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளேன்.
தமிழகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை அதிகம் நடந்து கொண்டிருக்கிறது. இதனை தடுக்க வேண்டும். ஆண்களை எதிர்கொள்ளும் உறுதி பெண்களுக்கு வேண்டும். யோகா பயிற்சி பெற்றதாலும், மனஉறுதியாலும் தான் ஆணிகள் மற்றும் ஐஸ் கட்டி பொருத்தப்பட்டிருந்த படுக்கையின் மீது அமர்ந்து, என்னால் யோகாசனம் செய்ய முடிந்தது. தினமும் யோகாசனம் செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
உடல் நலம் நன்றாக இருக்கும். பெண்கள் உடல் மற்றும் மன வலிமையுடன் இருப்பதற்கு யோகா முக்கியமானது.இவ்வாறு அவர் கூறினார். அப்போது யோகா பயிற்றுநர் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.