வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடக்கழிவு திட்டவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை பிரேமா தலைமை வகித்தார்.
பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை புவனேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் கலந்து கொண்டு திடக்கழிவு மேலாண்மை குறித்து பள்ளி மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்த வேண்டும். தேவையற்ற இடங்களில் குப்பைகளை கொட்டக் கூடாது. வலங்கைமான் பேரூராட்சியை பிளாஸ்டிக்கு இல்லா மற்றும் பசுமை நிறைந்த பேரூராட்சியாக மாற்றப்பட்டு வருகிறது. அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பேரூராட்சி சார்பில் மஞ்சள் பை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வலங்கைமான் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் அம்பேத்கர் குமார் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் சுகாதார மேற்பார்வையாளர் அம்பேத்கர் குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.