தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 5 மற்றும் 6 தேதிகளில் கோவையில் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளார்.இந்நிலையில்,முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இடங்களில் தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளாங்குறிச்சியில் உள்ள ஐடி பார்க்,காந்திபுரம் மத்திய சிறை வளாகத்தில் அமைய உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,
விளாங்குறிச்சியில் எட்டு தளங்களுடன் 300கோடி மதிப்பீட்டில் 2,98,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய தொழில்நுட்ப பூங்காவை ஐந்தாம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்.
ஆறாம் தேதி காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே மத்திய சிறைச்சாலை மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டுகிறார்.ஏழு தளங்களுடன் ஒரு லட்சத்து 98 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் இந்த நூலகம் அமைகிறது.
கோவையில் நடைபெற்ற மூன்று மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நாங்கள் பேசாத கருத்துக்களை எல்லாம் ஒரு நாளிதழ் வெளியிட்டுள்ளது.தவறான கருத்துக்களை மக்களிடையே பரப்ப வேண்டாம் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி,மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன்,துணைமேயர் வெற்றிச்செல்வன்,உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.