அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேடு அருகே மஞ்சமலை அடிவாரத்தில் அமையபெற்றிருப்பது வலையபட்டி கிராமம். இங்கு அரசு சார்ந்த பல்வேறு கட்டிடங்கள் உள்ளன. இதில் கடந்த 1962ம் ஆண்டு கட்டப்பட்ட தாய்சேய் நல விடுதி ஓட்டு கொட்ட வளாகத்தில் இடியப்போகும் நிலையில்செயல்
படுகிறது.
அவசர காலங்களில் தடுப்பூசிகள் போடுவது, நோய் தடுப்பு முன் உதவி செய்வது. நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்குவது, உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பணிகள் அவ்வப்போது இங்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் அந்த கட்டிட வளாகத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று வலையபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் காயத்தரி இதயசந்திரன் மாவட்ட கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் வலையபட்டி ஊராட்சியில் உள்ள அரசம்பட்டி,சல்லிகோடாங்கிபட்டி, வி.புதூர், லக்கம்பட்டி, ராமகவுண்டம்பட்டி, இச்சிகுளம், மற்றும் வாழைக்கேணி, போன்ற கிராமங்கள் அடங்கும். இங்கு சுமார் 5ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ளனர்.
இவர்கள் நலன் கருதி, இந்த சுகாதார உதவி மையத்தை தரம் உயர்த்தி, பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். மேலும் இந்த மையத்தில் விஷப்பூச்சிகளும், வவ்வால்களும், அட்டை பூச்சிகள் வந்து போகின்றன. பொதுமக்கள் நலன் கருதி அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.