கோவை மணமணக்குது.. மட்டன், சிக்கன் என 300 அயிட்டம்.. கோயம்புத்தூரில் உணவுத் திருவிழா.. எப்போ தெரியுமா
கோவையில் பிரம்மாண்ட உணவு திருவிழா இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை யார் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் தெரியுமா? உணவு திருவிழா எப்போது தெரியுமா?
கொங்கு மண்டலமே எதிர்பார்த்து காத்திருக்கும் மாபெரும் ‘கொங்கு உணவு திருவிழா & திருமண கண்காட்சி’!
கோவை கொடிசியா மைதானத்தில் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ல் கோலாகலமாக நடைபெறவுள்ளது!
தமிழ்நாடு கேட்டரர்ஸ் சங்கம் சார்பில் கோவையில் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் ‘கொங்கு திருமண உணவுத் திருவிழா & கண்காட்சி 2024’ எனும் பிரம்மாண்ட உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.
இந்த மிக சிறப்பான திருமண உணவு திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 1000க்கும் மேற்பட்ட சமையல் வல்லுநர்கள் (செப்ஸ்) பங்கேற்று 400க்கும் அதிகமான பலவகை உணவு வகைகளை (சைவம் மற்றும் அசைவம்) சமைத்து வழங்க உள்ளனர். இதில் குறைந்தது 100 வகையான ஸ்டார்டர்கள், 150 வகை மெயின் கோர்ஸ் உணவுகள், 100 வகை டெசர்ட் வகைகள் அடங்கும். இவை 2 நாட்களும் CODISSIA மைதானத்தில் மாபெரும் கல்யாண பஃபே அமைப்பில் விருந்தினர்களுக்கு வழங்கப்படும்.
இந்த விருந்தில் பங்கேற்க பெரியவர்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ.799+ ஜி.எஸ்.டி மற்றும் குழந்தைகளுக்கு ரூ.499+ ஜி.எஸ்.டி. நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். (12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெரியவர்களாகக் கருதப்படுவார்கள்). டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமே பெற முடியும், அதுவும் ‘புக் மை ஷோ’ மூலமாக தான் வாங்க முடியும்.
இந்த டிக்கெட்டுகளை 11.11.24 (திங்கட்கிழமை) அன்று ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் திரு.ஆர்.சுந்தர்; தமிழ்நாடு கேட்டரர்ஸ் சங்கத் தலைவர் ‘மாதம்பட்டி’ நாகராஜ்; அரோமா நிறுவனத்தின் தலைவர் திரு. பொன்னுசாமி, மற்றும் விஜயலட்சுமி விஜய வேலு அரோமா குழுமம், ‘தி மேட் செஃப்’ கவுஷிக் ஆகியோர் வெளியிட்டனர்.
இந்த மாபெரும் விருந்தில் வழங்கப்பட உள்ள அனைத்து உணவுகளையும் உண்டு மகிழ இந்த ஒரு டிக்கெட் போதுமானது. கூடவே, உணவுடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை விருந்தினர்கள் இலவசமாக கண்டு மகிழலாம்.
இந்த நிகழ்ச்சிகளில் பிரபல பாடகர் சத்யபிரகாஷ், விஜய் டிவி ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சி பிரபலம் மற்றும் செலிபிரிட்டி செஃப் தாமு, விஜய் டி.வி. புகழ் நடுவர் மற்றும் பிரபல நகைச்சுவை பேச்சாளர் ‘ஈரோடு’ மகேஷ், ‘கலக்கப்போவது யாரு’ புகழ் ராமர், மதுரை முத்து, குரேஷி, தொகுப்பாளினி மணிமேகலை, சூப்பர் சிங்கர்ஸ் பிரியங்கா, பூஜா, ஶ்ரீதர் சேனா மற்றும் டிஜே பிளாக் ஆகியோர் பங்கேற்கின்றனர். (இவர்களின் பங்கேற்பு என்பது அட்டவணைப்படி இருக்கும், குரேஷி மற்றும் செஃப் தாமு மட்டுமே இரண்டு நாட்கள் பங்கேற்பார்கள்).
இந்த உணவு திருவிழாவுடன் திருமணக் கண்காட்சியும் இடம்பெறும். இதில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தேவையான அலங்காரங்கள், போட்டோகிராபி பிராண்டுகள், நகைகள், ஜவுளி உள்ளிட்டவை தொடர்பான பிராண்டுகள் பங்கேற்கும்.
இந்த மாபெரும் நிகழ்வு ‘கோயம்புத்தூர் விழா 2024’ன் ஒரு பகுதியாக இருக்கும். மேலும் இது தமிழக கேட்டரிங் துறையின் சிறப்பை வெளிக்காட்டக்கூடிய ஒரு நிகழ்வாகவும், விருந்தில் பங்கேற்பவர்களுக்கு ஒரு மறக்கமுடியாத, பிரம்மாண்டமான திருமண விருந்து நிகழ்வு அனுபவத்தை உண்டாக்கவும் தான் பிரதானமாக நடத்தப்படுகிறதே தவிர லாப நோக்கத்தை மையப்படுத்தி நடத்தப்படும் நிகழ்ச்சி அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 50,000க்கும் அதிகமான மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த விருந்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, உணவு திருவிழாவின் போது ஏழை மக்களுக்கு உணவை வழங்கவும், முடிந்தவரை பிளாஸ்டிக் ஸ்பூன், ஸ்ட்ரா போன்றவை இல்லாததாக விருந்தாக இருக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விழாவில் பங்கேற்க மாலை 5 மணி முதல் அனுமதி வழங்கப்படும். வருகை புரிவோர் இரவு 8.30 மணிக்கு முன் உணவு கவுண்டர்களுக்குள் நுழையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதற்கு மேல் உணவு கவுண்டர்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே சமயம் உள்ளே வருபவர்கள் நிகழ்ச்சி முடியும் வரை இருந்து செல்லலாம்.
நவம்பர் 30ஆம் தேதி நடைபெறும் தொடக்க விழாவில் கோவை மாவட்ட நிர்வாகம், கோயம்புத்தூர் நகர நிர்வாகம், கோயம்புத்தூர் நகர காவல்துறை மற்றும் கோயம்புத்தூர் விழா 2024ன் தலைமைப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் பங்கேற்பு பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட பிறகு அறிவிக்கப்படும்.
மேலும் தகவலுக்கு : 97865 84184, 98944 99009.