செங்குன்றம் செய்தியாளர்
சென்னை செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் ஊராட்சி பெரிய தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருமை ஸ்ரீ பாமாருக்மணி சமேத வேணுகோபால் சன்னிதி சுவாமி திருக்கோயில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் விளாங்காடுபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ச.பாரதி சரவணன் மற்றும் புழல் ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் புழல்.பெ. சரவணன் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு துவங்கிய இவ்விழாவில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், கும்ப அலங்காரம், கரிகால பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட நான்கு கால பூஜைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது, கிராம பெரியோர்கள் முன்னிலையில் கும்ப கலசத்தில் புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கும் ஸ்ரீ பாமா ருக்மணி சமேத வேணுகோபால்சாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர் கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சாமி பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தூபதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் கிராமத் தலைவர் எஸ்.முருகன், உட்பட பக்த கோடிகள் ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டு சுவாமியின் அருளை பெற்று சென்றனர் இறுதியில் அன்னதானம் நடைபெற்றது. செங்குன்றம் சரக காவல் துணை ஆணையாளர் ராஜா ராபர்ட் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டிருந்தது.