கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 37 ஆவது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள ஜி. ஆர். டி அரங்கில் நடைபெற்றது.
பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல் கோபால கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் பொறுப்பு முனைவர் செங்குட்டுவன் வரவேற்புரை ஆற்றி ஆண்டறிக்கை வாசித்தார்.
பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி விஞ்ஞானி டாக்டர் சதீஷ் ரெட்டி கலந்து கொண்டார் இவர் 2018 முதல் 2022 வரை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) 13 ஆவது தலைவராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
மேலும், வானூர்தி மேம்பாட்டு நிறுவனம் (ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியின்) தலைவராகவும், பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகராகவும் உள்ளார்.
சிறப்பு விருந்தினர் தனது உரையில், பட்டம் பெறும் மாணவர்கள் அனைவரும் நாட்டின் நல்வாழ்வுக்குப் பங்களிக்க வேண்டும் என ஊக்குவித்தார்.
மாணவர்கள் தங்கள் வாழ்க்கைப் பயணத்தின் அடுத்த கட்டத்தைத் தொடங்கத் தயாராகும்போது, கல்வி என்பது கற்றுக் கொண்ட உள்ளடக்கம் அல்லது பெற்றுக் கொண்ட பட்டம் மட்டுமல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சிறப்பு விருந்தினர் வலியுறுத்தினார்.
இது சமகால உலகை எதிர்கொள்ளத் தேவையான திறன் மேம்பாடு, விமர்சன ரீதியாகச் சிந்திக்கும் திறன், சிக்கல்களைத் தீர்க்கும் திறன், சூழ்நிலைக்கு ஏற்றவாறு சவால்களை எதிர் கொள்ளும் திறன் தொடர்புடையது “கனவு, கனவு, கனவு. கனவுகள் எண்ணங்களாக ஆகியவற்றோடு மாறுகின்றன, எண்ணங்கள் செயலில் விளைகின்றன.” என்ற அப்துல் கலாமின் வைர வரிகளைச் சிறப்பு விருந்தினர் வலியுறுத்தி கூறினார்.
பட்டமளிப்பு விழாவில் 4389 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
இதில் 19 முனைவர் பட்டங்களும், 1110 முதுநிலைப் பட்டங்களும், 3260 இளநிலைப் பட்டங்களும் வழங்கப்பட்டன அத்துடன் முதல் மதிப்பெண் பெற்ற 81 மாணவர்களுக்குப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் சிறப்பு விருந்தினர் டாக்டர் சதீஷ் ரெட்டி வழங்கிச் சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் பி எஸ் ஜி கல்வி நிறுவனங்களின் பல்வேறு ஆட்சிக்குழு உறுப்பினர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்..
விழாவில் இறுதியாக கல்லூரி துணை முதல்வர் முனைவர் ஜெயந்தி நன்றியுரை வழங்கினார்.