எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி சுக்ரவார நள்ளிரவு வழிபாட்டில் சாமி தரிசனம்.

சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கிறார். மலைக்கோயிலில் உமாமகேஸ்வரர், சட்டநாதர் ஆகிய சுவாமிகள் அருள் பாலிக்கின்றனர். வாரம் தோறும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை சட்டை நாதர் சுவாமிக்கு சுக்கிரவார வழிபாடு நடைபெறும். சுக்கிரவார வழிபாட்டில் பங்கேற்று தரிசனம் செய்தால், சத்ருக்கள் தொல்லைகள் சட்ட சிக்கல்கள் நீங்கி, பில்லி, சூனியம், ஏவல் ஆகியவை விலகி நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம்.

பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள்,திரையுலக பிரமுகர்கள், நீதிபதிகள் தொழிலதிபர்கள் வருகை தந்து சுக்ரவார வழிபாட்டில் பங்கேற்று தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி சீர்காழி சட்டை நாதர்சுவாமி கோவிலுக்கு வருகை தந்தார். சுக்ர வார வழிபாடு நிறைவடைந்த பின்னர் வருகை புரிந்த எஸ்.பி.வேலுமணி பிரம்மபுரீஸ்வரர்சுவாமி, முத்து சட்டைநாதர், மலைக்கோயிலில் அமைந்துள்ள உமாமகேஸ்வரர், சட்டநாதர் ஆகிய சன்னதியில் வழிபாடு மேற்கொண்டார். தனது மகனின் திருமண அழைப்பிதழை வைத்து வழிபாடு செய்தார்.கோயிலுக்கு முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி வருகை புரிந்துள்ளதை அறிந்த ஏராளமான அதிமுகவினர்கள் கோயிலில் திரண்டு அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.