தேசிய காசநோய்ப்பு திட்டத்திற்கு கீழ் பொதுமக்கள் நலன் கருதி காசநோய் இல்லா தமிழ்நாடு என்ற 100 நாள் பிரச்சாரத்தின் தொடக்க விழா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு பிரச்சாரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 20 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,06,000 மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகளை கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினார்.
தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தும் முதுகு தண்டுவடம் பாதிப்புடையோருக்கான சிறப்பு மருத்துவ முகாமை கனிமொழி எம்.பி பார்வையிட்டார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.