திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சிபுரம் ஊராட்சி புது தெருவை சேர்ந்தவர் சண்முகம் இவரது மகன் ஐயப்பன் (35). இவர் தமிழக அரசின் தொகுப்பு வீட்டில் மனைவி மோனி உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் வீட்டில் உள்ள பொருட்கள் தீப்பிடித்து எரிந்து உள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் வலங்கைமான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த மரக்கட்டில், பீரோ மற்றும் மின் சாதன பொருட்கள், துணிகள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின. இதன் சேத மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.