வலங்கைமானில் தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் ஸ்ரீ உண்ணாமலை அம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட மலை மீது தீபம் ஏற்றப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் ஸ்ரீ உண்ணாமலை அம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மகா தீப பெருந்திரு விழாவை முன்னிட்டு கடந்த 4-ஆம் தேதி முதல் பத்து நாட்கள் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, நிகழ்ச்சியை உபயதாரர்கள் நடத்தினர்.
பத்தாம் நாளான நேற்று கார்த்திகை மகா தீப பெருந்திருவிழாவை முன்னிட்டு காலையில் சிறப்பு அபிஷேகமும் தீபாரதனை நடைபெற்று பரணி தீபம் ஏற்றுதல் நடைபெற்றது. மாலை 5 மணி அளவில் பஞ்ச மூர்த்தி சுவாமிகள் புறப்பாடு செய்து அண்ணாமலையாரின் அருள் தீபத்துடன் பிரகாரம் வலம் வருதல் நிகழ்ச்சியும், மாலை ஆறு மணிக்கு மேல் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை மலையில் கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் மகா தீபத்தை ஏற்றி வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக திருப்பரங்குன்றம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள், அருள் வாக்கு சித்தர் சர்வ சக்தி கரூர் மகாலட்சுமி அம்மா ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு மங்கள இன்னிசை விருந்தும், இரவு 7.30 மணிக்கு சொக்கப்பனை ஏற்றுதல், இரவு 8 மணிக்கு அன்னதானம் வழங்குதல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.கார்த்திகை மகா தீப திருவிழா மண்டகப்படி உபயதாரர்கள் ஆன கும்பகோணம் அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் ராணி தனபாலன், சென்னை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் எஸ். டி. சுவாமிநாதன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி எஸ். ராஜராஜேஸ்வரன், பரம்பரை அறங்காவலர் பெருந்துறை கே. நடராஜன், திருப்பூர் இந்தியன் ஸ்டீல்ஸ் உரிமையாளர் எஸ். கே. மணி (எ) துரை, சென்னை கனரா வங்கி பொது மேலாளர் (ஓய்வு) ஜி.சுப்பிரமணியன், வலங்கைமான் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் நற்பணி மன்ற அறக்கட்டளையினர், உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.