கோனக்கடுங்கால் ஆற்றின்” கரை உடைந்து ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கியது.
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் பெருக்கெடுத்த வெள்ள நீர் “கோனக்கடுங்கால் ஆற்றில்” தூர்வாரப்படாததால் ஆற்றில் மழை நீர் செல்வதில் தேக்கம் ஏற்பட்டு கரை உடைந்தது.
திருவையாறு தாலுகாவில் காவிரி வடிநில உபக்கோட்ட பிரிவில் பாசன வாய்க்காலாகவும், வடிகாலாகவும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிக்காக "கோனக்கடுங்கால் ஆறு" வரகூர் உள்ளிட்ட கிராமங்களை கடந்து அம்மன்பேட்டை பகுதியில் வெட்டாற்றில் கலக்கிறது.
இந்த நிலையில் சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் வெங்காய தாமரையும், நாணல் புல்லும், செடிகள் இருந்ததால் மழை நீர் செல்வதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்த மழையால் நீர் வரத்து அதிகமாகி வரகூர் அருகே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் ஆற்றில் ஏற்பட்ட உடைப்பால் வெள்ள நீர் வயலுக்குள் புகுந்தது ஏரி போல் மாறியது. நடவு செய்யப்பட்ட நெல், வாழை, வெற்றிலை தோட்டம் உள்ளிட்ட சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஆற்றில் ஏற்பட்ட உடைப்பால் வரகூர், கோனோரிராஜபுரம், கருப்பூர், ஐம்பதுமேல் நகரம், செந்தலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "கோனக்கடுங்கால் ஆற்றில் தூர்வாரும் பணிகள் முறையாக நடக்கவில்லை. ஆற்றில் மண்டிக்கிடக்கும் வெங்காயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என அப்போதே கூறினோம். ஆனால் காவிரி வடிநில உபக்கோட்ட பிரிவில் வரகூர், குழுமாத்தூர் மற்றும் ஐய்பதுமேல் நகரம் போன்ற பகுதிகளில் கடந்த ஆண்டு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதாக கூறி தொகை பட்டுவாடா செய்யப்பட்டு தூர்வாரப்பட்ட பணிகள் 100% நிறைவடைந்து விட்டதாக உதவி செயற்பொறியாளர் சிவக்குமார் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
தூர் வாரும் பணியில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தவில்லை, தொடர் மழையால் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இனியும் அதிகாரிகள் தூங்காமல் துரித கதியில் செயல்பட்டு மணல் மூட்டைகளை கொண்டு உடைப்பு ஏற்பட்ட பகுதியை அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையாக தூர் வாரும் பணியை செய்ய வேண்டும். இல்லை என்றால் இன்னும் பல கிராமங்கள் இந்த உடைப்பால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்" என்றனர்.