திருச்சி மாவட்டம் துறையூரில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு (டிச-13)நகராட்சி நிர்வாகம் மற்றும் அய்யப்ப சேவா சங்கத்தின் சார்பில் தெப்ப குளத்தில் உள்ள சுமார் 3,340 மாடங்களில் அகல்விளக்கு ஏற்றி தீப திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் துறையூர் நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி வைத்து கார்த்திகை தீபத் திருவிழாவை தொடங்கி வைத்தார்.
இதில் நகர்மன்ற துணைத் தலைவர் மெடிக்கல் முரளி ,2வது வார்டு கவுன்சிலர் நித்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தெப்பக்குளத்துக்கு முன்புறம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட சிவன், பார்வதி, விநாயகர், ஐயப்பன், முருகன் உள்ளிட்ட ஏழு கடவுள் சிலைகளுக்கு தீப ஆராதனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு வீபூதி வழங்கப்பட்டது.
துறையூர் பகுதி பொது மக்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பக்குளத்தில் உள்ள சுமார் 3,340 மாடங்களிலும் தீபம் ஏற்றி கார்த்திகை தீபத்திருநாளை கொண்டாடினர்.
தெப்பக்குளத்தின் நடுமண்டபத்தில் அமைக்கப்பட்ட வண்ண விளக்குகளால் நீர் நிரம்பிய தெப்பக்குளம் தீப ஒளியில் ஜொலித்தது.மேலும் அருகே உள்ள நந்திகேஸ்வரர் கோவிலில் உற்சவ மூர்த்திகளான சோமாஸ்கந்தர் மற்றும் மஹாசம்பத்கவுரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, மாட வீதியில் திருவீதி உலா நடைபெற்றது.
பின்னர் கோவிலின் பிரதான கிழக்கு வாசலின் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியினை காண சிறுவர், சிறுமியர் உட்பட ஏராளமான பொது மக்கள் வந்து கண்டு களித்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், நகர்மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், இளையராஜா, நகர துணை செயலாளர்கள் இளங்கோ,பிரபு, தர்மன் விஜய், நகர இளைஞரணி செல்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்