புதுச்சேரி காவல்துறைக்கு நன்றி, வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் வக்கீல் ப. ராம் முனுசாமி

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு புதுவையில் திரண்டிருந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை கையாளும் பணியில் காவல்துறையின் பங்கு, அனைவரும் மெச்சும் வகையில் அமைந்திருந்தது நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியது.

காலை முதலே, நகரப்பகுதியில் குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை வழிநடத்தி, போக்குவரத்தை கட்டுப்படுத்தி ஓய்வின்றி பணிபுரிந்த ஆயிரக்கணக்கான காவல்துறையினர், ஆளிநர்கள், ஊர்க்காவல்படையினர் மற்றும் காவல் அதிகாரிகளுக்கும் கோடான கோடி நன்றிகள்.

புதுவை முதல்வரால் புதிதாக பணியமர்த்தப்பட்ட 1200 காவலர்கள், ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் இந்த அணியில் பெரும்பங்காற்றினர். அவர்களுக்கும் நன்றி.

அனைத்து இடங்களிலும் தடுப்புகள் அமைத்தும், தீவிர ரோந்து பணிகள் வாயிலாகவும் போதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்த காவல்துறையினருக்கு சுற்றுலா பயணிகள் சார்பில் பாராட்டுக்கள்.

இந்த சவாலானப் பணியில் பெண்காவலர்களின் பங்களிப்பு பெரும் பாராட்டுக்குரியது.மதியம் சுமார் 2 மணியிலிருந்து இரவு 2 மணி வரை சரியான உணவில்லாமல் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பணி செய்த காவல்துறை நண்பர்கள், நாட்டின் எல்லையில் பணிபுரியும் இராணுவ வீரர்களுக்கு இணையான போற்றுதலுக்குரியவர்கள்.

பொதுமக்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக கொண்டாட காவல்துறையினர், தமது மனைவி குழந்தைகள் நண்பர்களை மறந்து, அவர்களுக்கு வாழ்த்து சொல்லக்கூட நேரமின்றி புரியும் சேவை அளப்பரியது.

அரசு அலுவகங்களில் ஒரு இளநிலை எழுத்தர் பெறும் மாதசம்பளம் அளவுக்கே ஊதியம் பெறும் காவலர்களின் பணிநேரம், பணிச்சுமை, தியாகங்கள், குடும்பத்தை பிரிதல் இவை மற்றவர்களைவிட பன்மடங்கு அதிகம்.

இது போன்ற நேரங்களில் காவல் பணி செய்பவர்களுக்கு சிறப்பு படி வழங்க அரசு ஆவணச்செய்ய வேண்டும். பண்டிகை கால பணி செய்யும் காவலர்களுக்கு அந்த வாரமே ஷிப்ட் முறையில் சிறப்பு விடுப்பு அளித்து குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் வழக்கமாக வருட இறுதியில் வழங்கப்படும் 13ஆம் மாத சம்பளம் இந்த முறை ஜனவரி முதல் வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் காவல்துறை இயக்குநருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

அனைத்து காவல் தெய்வங்களுக்கும் எனது மனமாரந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *