கந்தர்வக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் அறிவியல் ஒளி மாத இதழ் இணைந்து நடத்தும் அறிவியல் திறனறிவு தேர்வு நடைபெற்றது.
இத்தேர்வின் தேர்வு மையமாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் செயல்பட்டது. தேர்வினை தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் முத்துக்குமார் சிறப்புரை ஆற்றினார். அறிவியல் ஒளி திறனறிவு தேர்வு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா தேர்வினை ஒருங்கிணைத்தார்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் 1983 ஆம் ஆண்டு தமிழக அரசால் ஒரு தன்னாட்சி நிறுவனமாக மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
அறிவியல் மையங்கள் அமைந்திருக்கும் பகுதி சார்ந்த மாணவர்களும், பொதுமக்களும் அறிவியல் தொழில்நுட்பப் பயன்பாடுகளை பெறும் வண்ணம் அப்பகுதிகளில் அறிவியல் கண்காட்சிகள், கருத்தரங்குகள், அறிவியல் முகாம்கள், அறிவியல் சொற்பொழிவுகள், பயிற்சி வகுப்புகள் என பல்வேறு அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துதல்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் அறிவியல் பாடங்களை எளிதாகக் கற்க துணை செய்யும் விதமாக அவ்வப்போது பாடத்திட்டம் சாரா அறிவியல் நிகழ்ச்சிகளை நடத்துதல், கல்வியியல் நிகழ்ச்சிகளை நடத்துதல்.
இதன் மூலம் அறிவியல் மனப்பான்மையையும் திறன் உருவாக்கத்தையும் மாணவர்களிடையே மேம்படுத்துதல்.
அறிவியல் பரப்புரைகளுக்காக செய்முறை கருவிகளையும் துணைக்கருவிகளையும் உருவாக்குதல். இதன் மூலம் அறிவியல் கல்வி பரப்புரை உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது.
அறிவியல் ஒளி மாத இதழ் மூலம் அறிவியல் சார்ந்த செய்திகள் மாதம் தோறும் வெளிவருகிறது.
அறிவியல் ஒளி திறனறிவுத் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் 6, 7, 8 வகுப்பு அறிவியல் பாடப் பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டது. மூன்று வகையான வினாத்தாள்கள் ஏ, பி, சி என மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
தேர்வில் வினாக்களாக அளவுகோலை பயன்படுத்தி நீளத்தை அளவிடும் போது உனது கண்ணின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும், நிலவின் ஈர்ப்பு விசை, நமது பூமி எந்த திசையில் சொல்கிறது? பறவைகள் காற்றில் பறக்கும் பொழுது எவ்வாறு பறக்கும் திசையை மாற்றிக் கொள்கின்றன .காற்று குறித்த வினாக்கள், இந்தியாவின் முதல் செயற்கைக்கோளை வடிவமைத்தவர் உள்ளிட்ட பல்வேறு வகையான அறிவியல் வினாக்கள் கேட்கப்பட்டது.
தேர்வு எழுதிய மாணவர்கள் கூறும்பொழுது எதிர்காலத்தில் போட்டித் தேர்வு எழுதுவதற்கு மிகச்சிறந்த வாய்ப்பை அறிவியல் ஒளிதிறனறிவுத் தேர்வு ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்று கூறினார்கள். தேர்வு மைய கண்காணிப்பாளராக வானவில் மன்ற கருத்தாளர் தெய்வீகச் செல்வி, தன்னார்வலர்கள் சுமதி, சிந்து நதி, சௌமியா குணசுந்தரி உள்ளிட்டோர் செயல்பட்டனர்.