திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வரும் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தைப்பூச திருவிழாவையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அவர் எழுதிய கடிதத்தில், “பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலின் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப் பெருமானுக்கு காவடி எடுத்து வருகின்றனர். குறிப்பாக கிழக்குப் பகுதியில் தேவக்கோட்டை, மேற்குப் பகுதியில் பாளையங்கோட்டை/கோயம்புத்தூர்/திருப்பூர், தெற்கில் மதுரை/தேனி மற்றும் வடக்கில் திருச்சி/தஞ்சாவூர்/அரியலூர் பகுதிகளில் இருந்து பெருமளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திருவிழா காலங்களில் பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் அதிகாரிகள் தகுந்த ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், இதற்கு தென்னக ரயில்வேயின் ஒத்துழைப்பும் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்காக பின்வரும் வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என கோரியுள்ளார்:

  • கோயம்புத்தூர் – மதுரை (இருவழி)
  • பாளையங்கோட்டை – பழனி (இருவழி)
  • திருச்சிராப்பள்ளி – பழனி (இருவழி)
  • கரைக்குடி – பழனி (இருவழி)

பொதுமக்கள் நலன் கருதி இந்த சிறப்பு ரயில் சேவைகளை இயக்க தென்னக ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *