ராஜபாளையம் அருகே கிராமத்தில் கிணற்றில் விழுந்த மான் மீட்பு!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே குறிச்சியார்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் சுற்றுச் சுவர் இல்லாத கிணற்றில் காப்புக்காட்டில் இருந்து தப்பி வந்த ஒரு மான் நாய்களால் துரத்தப்பட்டு கிணற்றிற்குள் தவறி விழுந்தது.
தகவல் அறிந்தவுடன் ராஜபாளையம் தீயணைப்பு நிலை அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மானை 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் வலை மூலம் மீட்டு காட்டிற்குள் விட்டனர். மான் துள்ளி குதித்து தப்பி ஓடிவிட்டது. ஊர் பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்தினரை பாராட்டினார்கள்.