திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி நூற்றாண்டு விழா, இலக்கிய மன்ற நிறைவு விழா, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினால். நாகப்பட்டினம் தொகுதி செல்வராஜ் எம் பி, பூண்டி கலைவாணன் எம் எல் ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்றார், விழாவில் கலெக்டர் சாரு ஸ்ரீ கூறியதாவது:- இந்தப் பள்ளி 1921-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2020- ஆம் ஆண்டு நூறு ஆண்டுகள் எட்டியதை தொடர்ந்து நூற்றாண்டு விழா கொண்டாடும் வகையில் இந்த விழா நடக்கிறது.
இந்தப் பள்ளியில் படித்த பலர் பல்வேறு நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ள நிலையில் இந்த விழாவுக்கு வந்துள்ளனர். இவர்களின் வருகை கல்வி கற்கும் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமையும்.
இந்தப் பள்ளியின் 125 மற்றும் 150 -வது ஆண்டு விழாக்களில் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களாகிய நீங்கள் முன்னாள் மாணவர்களாக கலந்து கொண்டு பள்ளிக்கு பல்வேறு உதவிகளை செய்ய வேண்டும். மாணவப் பருவத்திலேயே நம் வருங்கால வாழ்க்கை முறை எவ்வாறு அமைய வேண்டும் என திட்டமிட்டு அதை நோக்கி நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் சாரு ஸ்ரீ பரிசுகள் வழங்கினார். விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, குடவாசல் பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி முருகேசன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன், குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.