செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் மின் தகன மேடை அமைப்பதற்காக சுடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த கல்லறைகளை ஊராட்சி மன்ற நிர்வாகம் அகற்றியதற்கு உறவினர்கள் எதிர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர்‌ ஊராட்சிக்குட்பட்ட சுடுகாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட இறந்தவர்களின் கல்லறைகள் உள்ளது. இதில் இறந்தவர்களுக்காக அவர்களின் உறவினர்கள் சமாதிக்கு மண்டபம் கட்டி வருடா வருடம் அவர்களின் நினைவாக தீபம் ஏற்றி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஊராட்சி மன்ற நிர்வாகம் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யப் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் அங்கு புதியதாக மின் தகனமேடை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

முன்னதாக இதன் விரிவாக்க பணிக்காக அங்கு ஏற்கனவே கட்டப்பட்டிருந்த கல்லறை மண்டபங்களை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டதை அறிந்த இறந்தவர்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அரசின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் உறவினர்கள் இறந்தவர்களின் அடையாளமாக இருந்த மண்டப இடத்தை இடித்து அந்த சுவடே தெரியாத வண்ணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அழுது புலம்பி தங்கள் கண்டனத்தை அரசிற்கு தெரிவித்தனர்.

ஊராட்சி மன்றம் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி நினைவஞ்சலி செலுத்திவந்த இடத்தை பொதுவாக அறிவிக்காமல் இடித்து தள்ளியும் அதே போல்இங்கு காணப்படும் இறந்தவர்களின் பல நினைவு மண்டபங்களை அகற்றாமல் ஒருதலை பட்சமாக அகற்றியது மென்மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது‌ .

எனவே இதனை முறையாக செயல்படுத்த நினைப்பவர்கள் அத்தனை கல்லறைகளையும் இடித்து ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் இடிக்கப்பட்ட கல்லறைகளையும் கட்டித்தர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். ஒரே சமயத்தில் பாடியநல்லூர் சுடுகாட்டில் உறவினர்கள் கூடியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *