மயிலாடுதுறை அருகே முட்டத்தில் சாராய வியாபாரிகளால் இரட்டை படுகொலை. சாராய வியாபாரத்தை தட்டி கேட்ட கல்லூரி மாணவன் மற்றும் இளைஞர் ஆகிய இருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம். மயிலாடுதுறை அரசு மருத்தவமனையில் போலீசார் குவிப்பு:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில், கல்லூரி மாணவன், பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞன் ஆகிய இரண்டு பேரை சாராயம் சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முட்டம் வடக்குதெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்தனர்,

அதை தட்டி கேட்பவர்களை அடித்தும் கொலைமிரட்டல் விடுப்பதும் வாடிக்கையாக இருந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறை சார்பில் முட்டம் பகுதியில் சாராய ரெய்டு நடைபெற்ற நிலையில் சாராயவியாபாரி ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் ராஜ்குமார் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

தெருவில் ஏன் சாராயம் விற்கிறீர்கள் என்று கேட்ட தினேஷ் என்ற சிறுவனை சாராய வியாபாரிகள் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிகேட்ட முட்டம் வடக்குத்தெருவை சேர்ந்த ஹரிஷ், (பாலிடெக்னிக் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்), மற்றும் உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவன் ஹரிசக்தி ஆகியோரை சாராய வியாபாரிகள் ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் தகறாரில் ஈடுபட்டு சராமாரியாக கத்தியால் குத்தியதில் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உயிரிழந்த நபர்களின் உறவினரிடம் விசாரணை மேற்கொண்டார். இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இரட்டை படுகொலை குறித்து பெரம்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சாராய வியாபாரிகளை தேடி வருகின்றனர்.

சாராய வியாபாரிகளால் இரட்டை கொலை அரங்கேறிய நிலையில் அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சாராய வியாபாரத்தை தடுக்காமல் சாராய வியாபாரிகளுக்கு போலீசார் உடந்தையாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *