தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் பிறந்த நாளை ஒட்டி மார்ச் மாதம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட அவைத் தலைவர் இறைவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மற்றும் திருவையாறு எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். இதில் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்பியுமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், தஞ்சாவூர் எம்பி ச.முரசொலி, முன்னாள் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன் திருவோணம் வடக்கு ஒன்றிய செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான மகேஷ் கிருஷ்ணசாமி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான சண்.ராமநாதன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, சதய விழாக்குழு தலைவர் து.செல்வம், மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட துணை செயலாளர்கள் மணிமாறன், கனகவள்ளி பாலாஜி, புண்ணியமூர்த்தி ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றியம். மற்றும் பேரூர் கழகங்களின் சார்பாக மார்ச் மாதம் முழுவதும் ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், பார்வையற்றோர் காதுகேளாதவர் விடுதி மாணவ, மாணவிகளுக்கு தினந்தோறும் உணவு, நலத்திட்ட உதவிகள் வழங்குவது.

திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கி, முதல்வரின் பிறந்த நாள் கொண்டாடும் வகையில் 2025-2026 நிதிநிலை விளக்க தெருமுனை கூட்டங்கள் நடத்தி கட்சி கொடியேற்றுவது.

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் 2025-2026 ல் தமிழ்நாட்டுக்கு எந்த நிதியையும் ஒதுக்காமல் தமிழக மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜக வின் மதவாத ஆட்சியை வன்மையாக கண்டிப்பது.

பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2152 கோடி நிதியை வழங்காமல், தமிழக மாணவர்களின் கல்வி மேம்பாட்டை தடுக்கின்ற வகையில் செயல்படும் ஒன்றிய, பாசிச பா.ஜ.க அரசை கண்டிப்பது.

மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வது, வெற்றியை தேடித்தந்த முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *