கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 34வது கல்லூரி தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய் டிவி புகழ் ஈரோடு மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு தற்காலச் சூழலில் பெண்கள் கல்வியோடு தைரியம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை போன்றவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல நண்பர்கள் நமக்கு வாழ்வில் உந்துசக்தியாக அமைவார்கள்.

பெற்றோர் அமைத்துத்தரும் நம் வாழ்க்கை நிலையை அடுத்தடுத்த படிநிலைகளுக்கு எடுத்துச்செல்ல வேண்டியது நம் கடமையாகக் கொண்டால் நம் வாழ்க்கை மிகச் சிறப்பாக மாறும். நம் முன்னேற்றத்திற்கு எதுவும் யாரும் தடையாக இருக்க முடியாது என்று கூறி மாணவிகளை ஊக்கப்படுத்தினார்.


எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு ஆர்.சுந்தர் அவர்கள் பேசும்போது, பல துறைகளிலும் முத்திரை பதித்த கல்லூரி மாணவிகளையும் ஆசிரியர்களையும் பாராட்டிப் பேசினார். முன்னதாகக் கல்லூரியின் சாதனைகளை உள்ளடக்கிய ஆண்டறிக்கையைக் கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா அவர்கள் வாசித்தார். நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனைத்தடம் பதித்த மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து பல்வேறு ஆய்வு நிறுவனங்களிடமிருந்து ஆய்வுத்திட்ட நிதி பெற்ற மற்றும் சிறந்த ஆய்வுக்கட்டுரைகள் வழங்கிய பேராசிரியர்கள் பாராட்டப்பட்டனர். கல்லூரியின் இளநிலை மற்றும் முதுநிலை மாணவிகளில் சிறந்த மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பெஸ்ட் அவுட்கோயிங் விருது வழங்கப்பட்டது. குழந்தைகளின் வெற்றித்தருணத்தில் பெற்றோரும் கலந்து கொண்ட நெகிழ்ச்சியான தருணங்கள் கல்லூரி தின விழாவுக்கு மேலும் மெருகூட்டின. மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளோடு விழா இனிதே நிறைவுபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *