மும்மொழிக் கொள்கை விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் பேசும்போது, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகரீகம் இல்லாதவர்கள் போல நடந்து கொள்வதாக கூறியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமையில் 50 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கும்பகோணம்-
மன்னார்குடி சாலையில் ஆலங்குடி கடைவீதி பகுதியில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரா பிரதானின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர். முன்னதாக ஆலங்குடி அஞ்சலகத்தில் தகவல் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை கருப்பு நிற ஸ்டிக்கர் கொண்டு மறைத்தன. இந்நிகழ்ச்சிகளில் திமுக முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.