மயிலாடுதுறையில் புகழ்பெற்ற மாயூரநாதர் ஆலயத்தில் மாசி சதுர்த்தியை முன்னிட்டு தனி சன்னதியில் வீற்றிருக்கும் நடராஜ பெருமானுக்கு சிறப்பு மகா அபிஷேகம். திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபாடு.

சிவபெருமானின் 64 திருவடிவங்களில் ஒருவர் நடராஜர் பெருமான். அபிஷேகப் பிரியரான நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறுமுறை மட்டுமே அபிஷேகம் நடைபெறும். எனவே இந்த ஆறு அபிஷேகங்களும் சிவாலயங்களில் மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு மாயூரநாதர் கோவில் அமைந்துள்ளது. தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட குற்றம் நீங்க உமையவள் அபயாம்பிகை மயில் உருவம் கொண்டு சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற ஸ்தலம் ஆகும். பல்வேறு சிறப்புகளையுடைய இக்கோயிலில்
தனி சன்னதியில் வீற்றிருக்கும் நடராஜ பெருமானுக்கு மாசி சதுர்த்தி மகாஅபிஷேகம் இன்று நடைபெற்றது. திருவெம்பாவையின் பாடல்கள் பாராயணம் செய்யப்பட்டு புனித நீர் அடங்கிய காடங்கள், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்கள் கொண்டும், பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டும் சிறப்பு மகாஅபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து மகாதீபாராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் நடராஜ பெருமான் அம்பாள் சமேதராக எழுந்தருள செய்து பஞ்சாமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *