தன்னம்பிக்கை ஏற்படுவது மட்டுமின்றி பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காண்பதாக பெண்கள் மகிழ்ச்சி

பள்ளிகளில் கைத்தொழில் பாடப்பிரிவுகளை மீண்டும் கொண்டு வர வேண்டும், கைத்தொழில் ஈடுபடும் பெண்களுக்கு மானியத்துடன் கடன் வசதி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை என்ற வார்த்தைக்கேற்ப எல்லா காலத்திலும் கைத்தொழில் என்பது வாழ்வாதாரத்திற்கு கைகொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் இப்போது டிரெண்டாக இருக்கும் வேலைகளில் ஆரி வேலைபாடும் ஒன்று. வீட்டில் இருந்தபடியே, குடும்ப தலைவிகளால் செய்யமுடிந்த வேலை என்பதால் இது வைரலாகி இருக்கிறது. அதேபோல, ஆரி வேலைபாடுகள் அடங்கிய பிளவுஸ் அணியும் பழக்கமும் தமிழ்நாட்டு பெண்களிடையே அதிகரித்திருக்கிறது

கோவில் திருவிழா, திருமணம், குடும்ப விழாக்கள், பண்டிகைகள்… என எல்லா கொண்டாட்ட நிகழ்வுகளிலும், ஆரி வேலைப்பாடு அடங்கிய பிளவுஸ் மற்றும் ஆடைகள் அணியவே பெண்கள் ஆசைப்படுகிறார்கள். இப்படி அதிக தேவை இருக்கும் ஆரி தொழில் மூலமாக ஏழை குடும்ப தலைவிகளுக்கு புதிய வருமானத்தை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே இருக்கும் ஸ்வீட்டி எஜுகேஷனல் டிரஸ்ட் தொண்டு நிறுவனம் ஒன்று , 100க்கும் மேற்பட்ட கைத்தொழில்களை பெண்களுக்கு கற்று தருவது மட்டுமின்றி, அவர்களை தொழில் முனைவோர்களாகவும் மாற்றி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஆரி வேலைபாடுகள் குறித்த பயிற்சி என்பது அதிக அளவில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு பயிலக் கூடிய பெண்கள் தமிழக அளவில் நடக்கக்கூடிய பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனையும் படைத்து வருகின்றனர்.

அந்த வகையில் விருதுநகரில் சமீபத்தில் மாநில அளவிலான ஆரி வேலைவாய்பாடுகள் குறித்த அகில இந்திய அளவிலான மாநாடு மற்றும் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து 5000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அசத்தியுள்ளனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் கோவில்பட்டி பெண்கள் கலந்துகொண்டு தங்கள் கைவண்ணத்தில் அசத்தி சாதனை படைத்துள்ளனர்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அகில இந்திய ஆரி ஒர்க் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் அந்த அமைப்பின் தேசிய தலைவர் டாக்டர்.L. அரவிந்த் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். விழாவில் தமிழ்நாடு ஆரி ஒர்க் சங்கத்தின் பொதுச் செயலாளர் S.பரமேஸ்வரி, மாவட்ட செயலாளர்கள் M.மகேஷ்வரி, B.பத்மகுமாரி, S.பத்மாவதி, S.ரம்யா, பேச்சியம்மாள் ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

இதுகுறித்து ஸ்வீட்டி எஜுகேஷனல் டிரஸ்ட் நிறுவனரும்,, தமிழ்நாடு ஆரி ஒர்க் சங்கத்தின் பொதுச்செயலாளருமான பேராசிரியர் S.பரமேஸ்வரி கூறுகையில் பெண்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கை பெற வேண்டும், பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு தான் பெண்களுக்கு கைத்தொழில் கற்றுத் தந்து வருகிறேன். கடந்த 19 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பயிற்சி அளித்து வருகிறேன். அதிலும் குறிப்பாக இன்றைக்கு ஆரி ஒர்க் வேலைப்பாடுகள் குறித்து பயிற்சி பெறுவதற்கு பெண்கள் அதிக அளவு ஆர்வம் காட்டுகின்றனர். பலர் பயிற்சி பெற்றுக் கொண்டு தொழில் முனைவர்களாக மாறி வருகின்றனர். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அகில இந்திய ஆரி ஒர்க் சங்கத்தினை தேசிய தலைவர் டாக்டர்.L. அரவிந்த் லட்சுமி நாராயணன் ஏற்படுத்தி உள்ளார். இதன் மாநாடு விருதுநகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் 5000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்

முன்பு பள்ளிகளில் குழந்தைகள் கைத்தொழில் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அதற்கான பாட வேலைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு அந்த நிலைமை இல்லை. எனவே பள்ளிகளில் மீண்டும் கைத்தொழில் பாடத்திட்டம் கொண்டு வர வேண்டும். அதேபோன்று ஆரி ஒர்க் உள்ளிட்ட கைத்தொழில் மேற்கொள்ளும் பெண்களுக்கு பொருளாதார ரீதியாக உதவு வகையில் அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தொழில் என்பது பெண்கள் முன்னேற்றத்திற்கு என்றைக்கும் கை கொடுக்கக் கூடியது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *