திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது.இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடைக் காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பாடைக் காவடி திருவிழா கடந்த மார்ச் 7- ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.

கடந்த 9-ஆம் தேதி முதல் காப்பு கட்டும் நிகழ்ச்சியும், 16- ஆம் தேதி இரண்டாம் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அன்று முதல் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா காட்சி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் தினசரி இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்வான கடந்த 23- ஆம் தேதி பாடைக் காவடி திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கடந்த 30- ஆம் தேதி புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது. இந்த வாரம் நேற்று 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குனி 4- ஆம் ஞாயிறு விழாவையொட்டி அதிகாலை முதல் இரவு வரை பாடைக்காவடி, பால் காவடி, அலகு காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். ஆலயத்தில் பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைப்பெற்று பக்தர்கள், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
இரவு 7- மணியளவில் குடவாசல் ஸ்ரீ சங்கரா கலாலயா நாட்டியப் பள்ளியின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மதிய அபிஷேக ஆராதனை மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சிகளை வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சரவணா டிரேடர்ஸ் உரிமையாளர் டி.எஸ்.ராஜ்மோகன் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், தக்கார் /ஆய்வர் க. மும்மூர்த்தி, ஆலய அலுவலக மேலாளர் தீ.சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், மண்டகப்படிதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.