நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டதால் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்க வலியுறுத்தி பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் பெரியசாமி, பொருளாளர் கணேசன், உப தலைவர் நந்தகுமார், உதவி செயலாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநில லாரி ஓட்டுநர்கள் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 600- க்கு மேற்பட்ட லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் வேலை இல்லா திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் தினந்தோறும் 10 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மெக்கானிக் கடைகள், டீக்கடைகள் மற்றும் பஞ்சர் பழுது பார்க்கும் கடைகள் போன்ற சிறு சிறு வணிகங்கள் குறைந்த போக்குவரத்து நடவடிக்கையால் வருமான இழப்பை சந்தித்து வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் அரசே ஏற்று இயக்கி ஆலையின் செயல்பாடுகளை கண்காணிக்க நிபுணர் குழுவை அமைத்து ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடுமையான மேற்பார்வை குழுவின் கீழ் இயக்கச் செய்து அதற்கு ஒரு சிறப்பு அரசு ஆணையை இயற்றப்பட வேண்டும். சுமார் 6,500 லாரிகள் ஆலையின் செயல்பாடுகளை நம்பி இருந்த நிலையில் ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தி செய்யும் கிட்டத்தட்ட 9 ஆயிரம் டன் பொருட்களைக் கொண்டு செல்ல தினசரி 430 லாரிகள் தேவைப்படும் நிலை இருந்தது.
ஆலை மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. உலக அளவில் தாமிர சரக்கு தேவையை மீட்டெடுக்கவும், தளவாடங்கள் மற்றும் உள்ளூர் பொருளாதரங்கள் மேலும் சேதமடைவதை தடுக்கவும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரமத்தி வேலூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 250- க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் , உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.