முன்னறிவிப்பின்றி கட்டுமான பொருட்கள் விலை ஏற்றம்-ரத்து செய்யக்கோரி ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு பேரணி
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று முன்தினம் முன்னறிவிப்பின்றி கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை ரத்து செய்யக்கோரி கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.
துறையூர், உப்பிலியபுரம் ஒன்றிய பகுதிகளில் உள்ள
அரசு ஒப்பந்ததாரர் நல சங்கம், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் ,நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் நல சங்கம், கட்டுமானப் பொறியாளர் நல சங்கம், கட்டுமான தொழிலாளர் சங்க நல சங்கத்தினர்
இணைந்து கட்டுமான பொருட்கள் எம் சாண்ட், பி சாண்ட் ,ஜல்லிக்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை முன்னறிவிப்பின்றி ஏற்றியதை ரத்து செய்யக்கோரி கலைஞர் சிலை முன்பு கோசமிட்டவாறு பேரணியாக வட்டாட்சியர் அலுவலகத்தை சென்றடைந்தனர்.
தங்கள் கோரிக்கையாக முன்னறிவிப்பின்றி கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை ரத்து செய்ய வேண்டும், இந்த விலை ஏற்றத்தால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசுத்துறை மற்றும் தனியார் துறை கட்டுமான பணிகள் அனைத்தும் தொடர்ந்து நடைபெறாமல் தடைப்பட்டு உள்ளது.கட்டுமான பணிகளின் தடையினால் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டுமான துறை சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நலிவடைந்த கட்டுமான தொழிலை மீட்டெடுக்க முன்னறிவிப்பின்றி கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை ரத்து செய்ய வேண்டும்.இதில் வரும் காலத்தில் கட்டுமான தொழில் நலம் காக்க அரசு புதிய விலைப்பட்டியலை அரசு விதியின் படி உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு பேரணியில் கோசங்கள் எழுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மோகனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.இப்பேரணிக்கு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் ஜெய்சங்கர் தலைமை வைத்தார்.
இதில் ஒப்பந்ததாரர்கள் வீரமணிகண்டன், ராஜேஷ், பத்மநாதன், வினோத், இந்திரஜித், முருகதாஸ், சுரேஷ், அண்ணாதுரை ,கட்டுமானப் பொறியாளர்கள் பிரதீப், லோகநாதன், சசிகுமார், சிவனேசன் மற்றும் கட்டுமான பணியாளர்கள், தொழிலாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் முத்தையன் அறிவுறுத்தலின் பேரில் உதவி காவல் ஆய்வாளர் ராஜேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்