போக்குவரத்து நெருக்கடியில் திணறும் சாயல்குடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன.
சாலை வரை நீண்ட கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கடும் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தத்தளிக்கின்றன. இதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல், உள்ளனர். இதனால் விபத்து ஏற்படும் என்பதை உணர்ந்தும், ஆக்கிரமிப்புகளை விட்டுவைத்துள்ள அதிகாரிகள், இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு அதிகப்படியான வாகனங்கள் ஒரு காரணமாக இருந்தாலும், சாலையோர ஆக்கிரமிப்புகள் மற்றொரு முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது.
நகரின் அனைத்து பிரதான சாலைகள், போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகள் என அனைத்து சாலைகளும் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தள்ளு வண்டி கடைகள், பிளாட்பாரக் கடைகள், சாலையோரம் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகள்.
தங்கள் இடத்தைக் கடந்தும் பொருட்களை வெளியே பரப்பி வைத்துக் கொள்வது போன்றவற்றால் சாலைகளில் பெருமளவு ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி குறுகி வருகின்றன. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி விடுகின்றனர். இதனால் பிரதான ரோடுகளில் கடும் நெருக்கடியும், நெரிசலும் ஏற்படுகிறது.
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். வருவாய் துறை, நெடுஞ்சாலைத்துறை, மற்றும் போலீசார் இணைந்து, இதில் எந்த சமரசமும், இல்லாமல் நடவடிக்கை எடுத்தால் சாயல்குடியில் நிலவும் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.