வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் கால்நடை மருந்தகம் மூலம் ஆதிச்சமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் இரண்டு நாள் நடைபெற்ற முகாமில் 800- க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போடப்பட்டது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குநர் அவர்களின் ஆலோசனைப்படி, வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட சந்திரசேகரபுரம் கால்நடை மருந்தகம் சார்பில் ஆதிச்சமங்கலம், விருப்பிட்சிபுரம், சந்திரசேகரபுரம் மற்றும் பூண்டி கிராமங்களில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
கால்நடை உதவி மருத்துவர் சக்திவேல் மற்றும் உதவியாளர் செந்தில் அடங்கிய மருத்துவ குழ ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். சுமார் 800- க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாம் அனைத்து கிராமங்களிலும் இரண்டு நாட்கள் போடப்படவுள்ளது.
ஆடு வளர்ப்போர் அனைவரும் 4- மாத வயதிற்கு குறைவான குட்டிகள் மற்றும் சினை ஆடுகள் நீங்கலாக மற்ற அனைத்து வயது ஆடுகளுக்கும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். எனவே பொதுமக்கள் அனைவரும் தத்தம் கிராமங்களில் நடைப்பெற உள்ள தடுப்பூசி முகாமில் தங்கள் ஆடுகளை அழைத்து வந்து, ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப் படுகிறார்கள்.