தருமபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் பணி தருமபுரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் சதீஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் எஸ் மகேஸ்வரன், தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய தேவ்ராஜ் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் தரணிதர், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி உள்ளிட்டோர் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் சதீஷ் ஒவ்வொரு வாகனமாக ஆய்வு செய்தார். பல வாகனங்களில் விபத்து காலங்களில் மாணவர்கள் வெளியேறுவதற்கான அவசர வழி கதவு முறையாக பராமரிக்கப்படவில்லை. எனவே, அவற்றை திறந்து பார்த்து ஆய்வு மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் சில பேருந்துகளில் அவசர வழி கதவுக்கு முட்டுக் கொடுக்கப்பட்டிருந்தது. அதனை பார்த்த ஆட்சியர், ஓட்டுநர்களிடம், “ஒரு திரைப்படத்தில் அறையின் கதவுக்கு முட்டுக் கொடுத்தபடி வடிவேல் தூங்குவது போல் கதவுகளுக்கு முட்டுக் கொடுத்து வைத்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.
பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்களிடம் தீத் தடுப்பான் கருவிகளை எப்படி பயன்படுத்துவது? என்பது குறித்து செய்து காட்டும் படி மாவட்ட ஆட்சியர் சதீஷ் கேட்டார். ஆனால், பல ஓட்டுநர்களுக்கு முறையாக தீத் தடுப்பானைகளை இயக்கத் தெரியவில்லை. எனவே, பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு எவ்வாறு தீ தடுப்பு கருவிகளை விபத்து காலங்களில் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சதீஷ் உத்தரவிட்டார்
முதலுதவிப் பெட்டிக்கு பதிலாக முதலுதவிப் பொருட்களை பிளாஸ்டிக் கவரில் போட்டு வாகனங்களில் வைத்திருந்த ஓட்டுநர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வந்த ஓட்டுநர்களைக் கொண்ட பள்ளி வாகனங்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின் போது பள்ளி வாகனங்களில் சுட்டிக் காட்டப்பட்ட குறைபாடுகளை வரும் 15ஆம் தேதிக்குள் சரி செய்ய வேண்டும் என்றும் 15 ஆம் தேதியன்று நடைபெறும் மருத்துவ முகாமில் அனைத்து ஓட்டுநர்களும் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தினார்.
பள்ளி வாகன ஓட்டுநர்கள் மத்தியில் பேசிய ஆட்சியர் சதீஷ், “தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்கள், வாகனங்களை இயக்கும் போது சாகசம் செய்யக் கூடாது. மேலும் நீங்கள் இயக்குவது சாகச வாகனமும் அல்ல. பள்ளி மாணவர்களை காக்கும் பொறுப்பு பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு உள்ளது. வீலிங் செய்பவர்கள் என்றாவது அவர்கள் குழந்தைகளை வைத்து வீலிங் செய்திருக்கிறார்களா? வீலிங் செய்பவர்கள் ஒரு டயரில் ஓட்டுகிறார்கள்… எகிறி குதிக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒரு வயது இரண்டு வயது குழந்தைகளை வைத்துக் கொண்டு சாகசம் செய்வதில்லை. எனவே, பள்ளி வாகனங்களை ரேஸில் பங்கேற்க வேகமாக ஓட்டுவது போல ஓட்டக் கூடாது. அளவுக்கு அதிகமான வேகம் தேவையில்லை. குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து கொண்டு வந்து, பின்னர் அவர்களை வீட்டுக்கு அழைத்து சென்று விடும் பொறுப்பை உணர்ந்து பள்ளி வாகன ஓட்டுநர்கள் செயல்பட வேண்டும்” என்று கூறினார்.