தி.மு.க. ஆட்சியை அகற்றுவதற்கான வேலைகளை செய்து வருகிறேன்
சசிகலா பேட்டி.
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், ஜூன்-11. தஞ்சாவூரை அடுத்த காச வளநாடு கோவிலூரில் ஜம்பு கேஸ்வரர்கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் கலந்து கொண்ட வி.கே.சசிகலா தி.மு.க. ஆட்சியை அகற்றுவதற்கான வேலைகளை செய்துவருகிறேன். 2026 சட்டசபை தேர்த லில் சரியான பாடம் கிடைக்கும் என சசிகலா கூறினார்
மேலும் அவர் கூறியதாவது,
தமிழ்நாடு வளர்ந்துள்ளதாக தி.மு.க.வினர் கூறினாலும், எதார்த்தம் அவ்வாறு இல்லை. இதுவரைக்கும் யாருக்கும் வேலை கொடுக்க வில்லை. ரூ.1,000 உதவித்தொகையை சிலருக்கு கொடுத்து விட்டு அந்த வீட்டில் இருந்து ஆண்டுக்கு ரூ.7 ஆயிரம், ரூ.8 ஆயிரம் வசூல் செய்து விடு கின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது வீட்டு வரி, மின்சார வரி உயர்த்துவது வழக்கம். கடந்த 2008-ம் ஆண்டில் உயர்த்தப்பட்ட வரிகள் ஜெயலலிதா ஆட்சியில் உயர்த்தப் படவில்லை. இப்போது சதுர அடி கணக்கில் வரி இரட்டிப்பாக விதிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த ஆட்சி இருக்கக்கூடாது. அதற்கான வேலைகளை செய்து வருகிறேன். கூட்டணிக்கு முன்பு கட்சிகள் எதிரும், புதிருமாக இருக்கும். ஒரு நாள் மேடையில் ஒன்றாக நின்று தேர்தல் கூட்டணி எனக்கூறுவர். இது எப்போதுமே தேர்தலுக்கு மட்டுமே உள்ள கூட்டணிதான். தங்களுடைய கூட்டணி வெற்றி பெற வேண்டும் என ஒவ்வொருவரும் நினைப்பர். இது தவறல்ல.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை வெளியே வந்துள்ளது. இன்னும் நிறைய ‘சார்’ பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன. காவல்துறை காலம் தாழ்த்தியதன் மூலம் கோப்புகளை எப்படி தயார் செய்கின்றனர் என்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிட்லபாக்கத்தில் சமூக நலத்துறை நடத்தும் பெண்களுக்கான காப்பகத் தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. ஆனால் அங்கு கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை. எங்கெங்கு காப்பகம் உள்ளதோ அந்த எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்தின் கண்காணிப்பு அவசியம் தேவை.
மேற்கு மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், ஈரோட்டில் முதியவர்கள் கொலை செய்யப்படுகின்றனர்.
இதற்கு காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்-அமைச்சர் பதில் அளிக்க வேண்டும். இதற்கு வருகிற 2026 சட்டசபை தேர்தலில் சரியான பாடம் கிடைக்கும் என கூறினார்.