கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் தெற்கு டிவிஷன் பகுதியில் வசித்துவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முந்தா மோனிகா தேவி ஆகியோரின் ஏழு வயது மகள் ரோசினியை
மாலை சுமார் ஆறுமணியளவில் வீட்டின் பின்புறம் தாயின் கண்முன்னே சிறுத்தை கவ்வி தூக்கிச் சென்று அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மறைந்தது இதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஆறு மணி முதல் வனத்துறை, காவல்துறை மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மோப்பநாய்களின் உதவியோடு தேடிவந்த நிலையில் மதியம் குடியிருப்பை ஒட்டியுள்ள சுமார் முன்னூறு மீட்டர் தொலைவில் உள்ள யூகாலிப்டஸ் வனப்பகுதியில் சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் சடலத்தை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக கொண்டு சென்றனர்
இச்சம்பவத்தையறிந்த சிறுமியின் பெற்றோர்கள் கதறி அழுத காட்சி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் இழப்பீட்டு தொகையாக ரூபாய் 50 ஆயிரம் முன்பணமாக வழங்கப்பட்டது
மேலும் மீதமுள்ள 9 லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாயை நாளை அமைச்சர் வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் குழந்தையை தாக்கிய சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்